///30.11.2019 அன்று தருமபுரி முத்து இல்லத்தில் நடந்து முடிந்த தகடூர் புத்தகப் பேரவையின் 3வது புத்தக அறிமுக விழாவை முன் வைத்து
   
 தினசரிகளைத் தின்று செரித்து வாழும் சராசரிகளிலிருந்து விலகி சரியான பார்வையில் இந்த சமூகத்துடன் உறவு பேணுபவன் ஒரு சிறந்த வாசிப்பு பழக்கம் உள்ளவன் மட்டுமே.சராசரிகளின் இந்த இயந்திர  வாழ்க்கை என்பது மென்று துப்பிய கரும்பு சக்கைகள். சராசரிகளிலிருந்து நாம் எதையும் பெற முடியாது. அவைகளில் எவ்வித வளர்ச்சி நோக்கும் இருக்காது.வாசிப்பு ஒருவனை கூர்மையான பார்வை கொண்டவனாக மாற்றுகிறது. அவனுக்கு சமூகத்தின் மீது நுண்மையான அவதானிப்பை ஏற்படுத்துகிறது.வாசிப்பு மட்டுமே ஒருவரை அறிவை நோக்கி,புதுமையை நோக்கி நகர்த்தும்.அப்படி தருமபுரியை அறிவை நோக்கி நகர்த்தும் பணியை தகடூர் புத்தகப் பேரவை முன்னெடுத்து அதை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இரண்டு ஆண்டுகள் நடந்து முடிந்த தருமபுரி புத்தகத் திருவிழாக்களின் வழியே தருமபுரி மக்களின் வாசிப்பு பழக்கத்தையும்,அதை நோக்கி அவர்களை வரவழைத்ததும் தகடூர் புத்தகப் பேரவையின் ஆகச் சிறந்த பணியென கருதுகிறேன். தருமபுரி மாவட்டம் கல்வி,பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டம் என்ற தட்டையான பொதுப்பார்வை உண்டு.ஆனால் கடந்த பத்தாண்டுகளில் போட்டித் தேர்வுகளில் அதிக இடங்களை பிடிப்பவர்கள் தருமபுரி  மண்ணைச் சேர்ந்தவர்களே. தொழிற்ச்சாலைகள் இல்லையென்றாலும் ஒவ்வொருவரும் கல்வி வழியே தங்களை ஒரு தனி மனித தொழிற்சாலையென நிறுவி தங்களை வளர்த்து வருகிறார்கள்.

அதனால் இயல்பிலேயே தருமபுரியில் வாசிப்பு குறித்த ஆர்வமும்,தீவிரமாக வாசிப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகம் என்பதும்,அதன் பரப்பு விரிந்து அகலமாக இது போன்ற புத்தக அறிமுகமும் அதன் மீதான உரையாடலும் அவசியமாகிறது.தருமபுரியில் இது போன்ற அறிவுத் திருவிழாக்களை தொடங்கி அதை தொடர்ந்து முன்னெடுத்து நடத்த காரணமான காரியதரிசிகள் மரியாதைக்குரிய மருத்துவர் திரு.இரா.செந்தில்,ஆசிரியர் திரு.தங்கமணி,திரு.ராஜசேகர், திரு.ராஜன், திரு.அறிவுடை நம்பி இன்னும் எனக்கு பெயர் தெரியாத பங்களிப்பாளர்களின் பங்களிப்பையும் எண்ணி மதிக்கிறேன்.


3வது புத்தக அறிமுக விழா மனதிற்கு மிக நிறைவாக இருந்தது. எனது நோக்கில் "நள்ளிரவில் சுதந்திரம்" என்ற நூலை அறிமுகப்படுத்திய ஆசிரியர் திரு .செந்தில்குமார்,
"கொங்கு நாட்டில் தாமஸ்மன்றோ " நூலை அறிமுகப்படுத்திய நண்பர் திரு.எம்.சக்திவேல் ஆகிய இருவரும் அந்த நூலை உள் நெருங்கி பேசினார்கள்.
"பெரியார் இன்றும் என்றும் " பற்றி பேசிய அண்ணன் சசிகுமார் அவர்களின் பேச்சு சமகால நிகழ்வுகளை பெரியாரோடு தொடர்புபடுத்தி அவரின் சமூக எள்ளலான பார்வையை பதிவு செய்வதாக இருந்தது.

தாய் நாவலை முன்வைத்து பேசிய நண்பர்  சிவலிங்கம்.இறையன்பு அவர்களின் " அழகோ அழகை" அறிமுகப்படுத்திய திரு.கவிமலரவன் ஆகியவர்களின் நூல் அறிமுக திறனும் சிறப்பாக இருந்தது.விழாவிற்கு சிறப்பு அழைப்பின் பேரில் வந்திருந்த அய்யா இடைப்பாடி அமுதன் அய்யா அவர்களின் உரையில் வரலாற்று நிகழ்வுகளை அவர் அணுகி சேகரிக்கும் உழைப்பை உணர்ந்தேன்.அவர் எழுதிய "கொங்கு நாட்டில் தாமஸ்மன்றோ" தருமபுரியைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளைச் சுமந்த  சிறந்த ஆவணம் என ஆசிரியர் திரு .தங்கமணி அவர்கள் பல முறை கூறியதை கேட்டிருக்கிறேன்.அதை இன்னும் நான் படிக்க வில்லை என்பது என் பெருங்குறை .

ஆசிரியர் திரு .தங்கமணி அவர்களுக்கு வரலாற்று பார்வையோடு வரலாற்று சின்னங்களின் வடிவத்தை நேரில் சென்று பார்க்கும் வெறி கொண்டவர். பயணங்களின் வழியே இந்திய நிலங்களை அளந்து பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்நிகழ்வை தலைமை தாங்கி நடத்திய நூலகர் திரு.சரவணன் அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்வை வழி நடத்தினார். நிகழ்வின் இறுதியில் அறிமுகப்படுத்தி பேசப்பட்ட நூல்கள் மீதான பார்வையை உரையாக நிகழ்திய மருத்துவர் இரா.செந்தில் அவர்களுக்கும் எச்சரிக்கை மணி அடித்து அனைவரையும் சிரிக்க வைத்தார் நண்பர் ஜெயவேல்.
இறுதியாக நூல் அறிமுக நிகழ்வை முழுதும் ஒளிப்பதிவு செய்து ஒத்துழைத்த நண்பர் திரு.அறிவுடைநம்பியின் நன்றியுரையுடன் விழா நிறைவில் நின்றாலும்,வெளியில் நிற்காமல் பெய்த மழையில் என் முகத்தை நனைத்துக் கொண்டும், நிகழ்வின் நினைவுகளை என் அகத்தில் அணைத்துக்கொண்டும் என் வீடு சேர்ந்தேன்///

#20 நூல்கள் அறிமுக நிகழ்வு

#இடம்: முத்து இல்லம்,தருமபுரி

#நாள் : 30.11. 2019

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்