///தென்னிந்திய மொழிகளில் கன்னட இலக்கியம் மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு கனத்த மரியாதையும்,
ஈர்ப்பும் உண்டு அது சிவராமகரந்த், எஸ்.எல்.பைரப்பா,விவேக் ஷான்பாக் போன்றவர்களின் படைப்புகளை வாசித்ததின் வழியாக அந்த மரியாதையும் ஈர்ப்பும் எனக்கு ஏற்ப்பட்டது என நினைக்கிறேன்.

விவேக் ஷான்பாக் கன்னடத்தில் எழுதிய "காச்சர் கோச்சர்" என்ற நாவலை தமிழில் கே.நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்திருந்தார்.
அந்த மொழிபெயர்ப்பு அவ்வளவு ஒரு நேர்த்தியாக,கச்சிதமாக இருந்தது.
அது முதல் கே.நல்லதம்பி அவர்களின் மொழிபெயர்க்கும் படைப்புகளை வாசிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்ப்பட்டது.

கன்னடத்தில் திருமதி
பி.வி.பாரதி எழுதிய தன் வரலாற்றுக் கதையை தமிழில் "கடுகு வாங்கி வந்தவள்" என்ற பெயரில் திரு.கே.நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்.

 கடுகு வாங்கி வந்தவள் எனும் தன் அனுபவ கதை எனும் நூல் திருமதி பி.வி.பாரதி அவர்களுக்கு மார்பக புற்று கட்டி ஏற்பட்டதையும்,
அதிலிருந்து மீள அவர் அனுபவித்த மன அவஸ்தைகளையும்,அதனைக் கடக்க அவர் உள்மனதுக்குள் அவர் நிகழ்த்திய மனப் போராட்டங்களையும் உண்மைக்கும்,மரணத்துக்கும் அருகில் வைத்து பதிவு செய்திருக்கிறது.

நம் உடலுக்கு சாதாரண ஒரு காய்ச்சல் வந்தாலே நம் மனமும்,உடலும் ஒருவித சோர்வில் துவண்டு விடும்.
பொதுவாகவே நம் உடலை நாம் சரிவர கவனித்துக் கொள்வதில்லை.
நம் உடலுக்கு ஏதாவது நேர்கின்ற வரை உடல் பற்றிய பிரக்ஞை அற்று வாழ்கிறோம்.

நாம் நம் உடலை  சரியாய் இயக்காமல் வெறுமனே குப்பையை போல் சுமந்து திரிகிறோம்.

நம் உடலின் அத்தனை உறுப்புகளையும் நாம் கவனிக்காமல் அலட்சியத்துடன் நம் உடலை நாம் அவமதிக்கிறோம்.
உடல் இயங்காமல் இம்சைக்கு உள்ளாகும் போதுதான் உடல் பற்றிய அக்கறையும் ஒரு பயமும் நமக்கு வருகிறது.

தனக்கு மார்பக புற்று கட்டி வந்த பிறகு அதை எதிர்கொள்ள மருத்துவம் மருந்துகளைத் தாண்டி நோயை எதிர்கொள்ள நமக்கு மனதிடமும்,நலிந்து விடாத நம்பிக்கையும் தேவை என்பதை பி.வி. பாரதி இதில் பதிவு செய்கிறார்.

புற்று கட்டி வந்த பிறகு தன் அன்றாடமும்,மனமும் எப்படி சிதைந்தது என்பதை எவ்வித உணர்ச்சி மேலோங்களும் இல்லாமல் பதிவு செய்தது என்பது தான் இந்த படைப்பின் பலமே.

புற்றுநோய்  என்பது  நோய்களில் கொஞ்சம் காஸ்ட்லியான நோய். ஏழைகளுக்கு இந்த நோய் வரவே கூடாது என வேதனைப்படுகிறார் பி.வி.பாரதி.
புற்று சிகிச்சைக்காக பி.வி.பாரதி அவர்கள் எட்டு முறை கீமோ சிகிச்சை செய்துகொள்கிறார்.

கீமோ சிகிச்சை செய்துகொள்வது என்பது ஒரு போரைப் போல என்கிறார் பி.வி.பாரதி.நல்லவர்களும் அழிவார்கள், கெட்டவர்களும் அழிவார்கள் என்பதுபோல உடலிலுள்ள ரத்த வெள்ளை அணுக்களும் அந்த சிகிச்சையின் போது சேர்ந்து அழியும் ஆபத்து உள்ளது என்கிறார்.

ஒவ்வொரு கீமோ சிகிச்சையின் போதும் தன் உடல் அனுபவிக்கும் வலியானது பிரசவ வலியை விட மோசமானது என்றும்,அந்த வலி தன்னுடலை ஒரு சப்பாத்தி மாவைப் போல பிசைந்து விடுகிறது என்று பதிவு செய்கிறார் பி.வி.பாரதி.

ஒருவருக்கு நோய் வந்தப் பிறகு அவர் நோயிலிருந்து மீண்டு வர நண்பர்கள், குடும்பம்,உறவுகளின் அரவணைப்பும், அன்பும் ரொம்ப முக்கியம் என்பதையும் பதிவு செய்கிறார் பாரதி.

பொதுவாகவே தன் வரலாற்று கதை என்பது  கதை கூறுபவரின் அனுமதியோடு அவர்களின் அந்தரங்கங்க வாழ்வை நாம் பார்ப்பதற்கு அனுமதிப்பதாகும்.

சில தன் வரலாற்றுக் கதைகளில் வாசிப்பவர்களின் சுவாரசியத்திற்காக கூடுதலாக சில விஷயங்கள் புனையப்படும் சாத்தியங்களும் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

எடுத்துக்காட்டாக கமலா தாஸின்
"என் கதை" தன்வரலாற்று நூலைப்போல.அதில் கமலாதாஸ் சுவாரசியத்திற்காக சில விஷயங்களை  கூடுதலாக எழுதியிருப்பதாக அவரே கூறியிருக்கிறார்.

ஆனால் கடுகு வாங்கி வந்தவள் நூலில் பி.வி.பாரதி எதையும் கூடுதலாக கூறவில்லை நிகழ்ந்ததை எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமல் வாழ்விலிருந்து மரணம் நோக்கி புற்றுநோய் தன்னை இழுத்துக்கொண்டு சென்றதின் வலியை,வாதையை நிகழ்வுகளாக விவரிக்கிறார்.

மார்பக புற்று கட்டியால் பாதிக்கப்பட்டு மரணத்தின்  வாசல்வரை  சென்ற ஒரு பெண்ணின் மன உணர்ச்சிகளின் ஒட்டுமொத்த தவிப்பை பதிவு செய்ததில் முக்கிய படைப்பாகவும்,வாசிக்க வேண்டிய புத்தகமாகவும் அவசியம் பெறுகிறது "கடுகு வாங்கி வந்தவள்".

"கடுகு வாங்கி வந்தவள்" என்ற தலைப்பு புத்தரிடமிருந்து பெறப்பட்டது.

கருநாகம் தீண்டி இறந்த தன் மகனை மடியில் வைத்துக் கொண்டு புத்தரிடம் தன் மகனுக்கு உயிர் பிச்சை கொடுக்க வேண்டும் என கெஞ்சுகிறாள் ஒரு அபலைப் பெண்.

அதற்கு ஒப்புக் கொண்ட புத்தர் அந்தப் பெண்ணிடம் உன் மகனுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால் மரணமே நிகழாத வீட்டில் ஒரு பிடி கடுகு வாங்கி வா என்கிறார்.

அந்தப் பெண்ணும் ஒவ்வொரு வீடாக ஒரு பிடி கடுகு கேட்கிறாள்.போன மாதம் தான் என் மகனை இழந்தேன் என்கிறாள் ஒரு பெண்.மூன்று மாதங்களுக்கு முன் தான் என் கணவனை இழந்தேன் என்கிறாள் ஒருத்தி.

இப்படி ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்ட பெண் வெறுங்கையுடன் புத்தரிடம் வருகிறாள்.மரணம் என்பது நிகழக்கூடியது.பிறக்கும் யாரும் இறக்கத்தான் வேண்டும்.அதை தடுக்க முடியாது என்று பித்தர் கூறுவதை உணர்கிறாள் அந்தப் பெண்

அப்படி புற்றுநோய்க் கட்டியிலிருந்து பி.வி.பாரதி மீண்டு வந்து மரணத்தை வென்றதால் "கடுகு வாங்கி வந்தவள்" என்ற தலைப்பை கே.நல்லதம்பி அவர்கள் மிகப் பொருத்தமாக வைத்திருக்கிறார்///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்