///பூமணியின் பிறகு நாவல் வாசித்து முடித்தேன்.தமிழில் எதார்த்தவாத நாவல் எழுதுபவர்களின் எண்ணிக்கை சொற்பம்.அதில் முதன்மையாகவும், முழுமையான கலைத்தன்மை கைகூடும் படைப்புகளை படைப்பதில் பூமணி முந்தி நிற்கிறார்.

சக்கிலியக்குடியில் பிறந்த அழகிரி பகடை என்பவனின் வாழ்வின் வழியாக மணலூத்து என்ற கரிசல் கிராமத்தின் மண், அதன் மனிதர்கள், அவர்களின் சாதிய அடுக்குகள், அவர்களின் மொழி, அவர்களின் அன்றாட வாழ்வு முறை என எவ்வித மிகைப்படுத்தல் மொழி அல்லாத ஒரு எதார்த்த வாழ்வியலை நாவலாக நம் முன் நிறுத்துகிறார்.

வாசிப்பவர்களை எவ்வித உணர்ச்சிகளின் உயரத்துக்கும் கொண்டு செல்லாமல் எழுதுவது தான் பூமணியின் மிகப் பெரிய பலமே.பிறகு நாவலை கூர்ந்து வாசிக்கும் போது அது ஆழமான பல்வேறு தளங்களுக்கு நம்மை இழுத்துச் செல்லுகிறது.

நாவல் முழுமைக்கும் பயணிப்பது அழகிரி பகடையின் மீது தான். காவக்காரர் கந்தையாவின் அறிவுறுத்தலின் படி செருப்பு , கமலைச்சாமான்கள் தைத்து தர சத்தியநாதபுரத்திலிருந்து மணலூத்து கிராமத்திற்கு அழகிரியும் அவனது மனைவி காளி,அவனது மகள் முத்துமாரி ஆகியோரும் வருகிறார்கள்.

அழகிரியின் பாத்திரத்தை அறவுணர்ச்சியும்,எல்லோருடனும் இணங்கி போகும் மனப் போக்குமுள்ள ஒரு எளிய கிராமத்து மனிதனாக உருப்படுத்தியிருப்பார் பூமணி.நாவல் நாடு சுதந்திரம் அடையும் காலத்தை ஒட்டி பயணிப்பதால் சுதந்திரம் மீதான கிராம மக்களின் பார்வையை அவர்களின் மண் மொழியில் பகடி கலந்து பதிவு செய்கிறார்.

நாவலில் அழகிரியின் மகளாக வரும் முத்துமாரி பாத்திரம் திருமணம் வழியே ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சுரண்டல், அவலத்தின் வடிவமாக வருகிறாள்.

செவலப்பட்டி வயிரவனக்கு வாக்கப்பட்டு அவனுடன் வாழ்ந்த வாழ்வுக்கு வர வாக சுடலை என்ற பையனை பெற்றெடுக்கும் முத்துமாரி, வயரவன் பட்டாள்ததுக்கு போன பிறகு போக்கும் புத்தியும் மாறி முத்துமாரியை அவள் அப்பன் வீட்டுக்கு அனுப்பி விடுகிறான்.

ஆறு மாதம் வாழாவெட்டியாய் வாழும் முத்துமாரி வயரவனுடன் வாழ நடக்கும் ஊர்க்காரர்கனின் பேச்சுவார்த்தையில் வயரவன் முத்துமாரியை வேண்டாமென்று உறவை முறித்து விடுகிறான்.பிறகு அய்யக் குளம் முனியாண்டியை மணந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும் முத்துமாரி அவனுடன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் முத்துமாரியை முனியாண்டியும் நிராகரிக்க கைக்குழந்தையை இடுப் போடு சேலையில் இறுக கட்டி ஊருக்கு வெளியேயுள்ள கிணற்றில் தாயும் சேயும் பிணமாக மிதக்கிறார்கள்.

இந்த இடத்தில் கூட உணர்ச்சிகளை ஊதிப்பெருக்கும் வேலையை பூமணி செய்வதில்லை.முத்துமாரியின் மரணத்தை சாதாரணமாக கடந்து செல்கிறது பூமணியின் எழுத்து .ஆனாலும் வாசிக்கும் போது நம் நெஞ்சை துயர் கவ்வவே செய்கிறது.

பொதுவாகவே பெண்கள் சக்கிலியக்குடியில் பிறந்தாலும்,மேட்டுக்குடியில் பிறந்தாலும் சமூகச் சுரண்டலின் வடிவம் என்பதனை முத்துமாரியின் மரணம் வழியே உறுதிப்படுத்துகிறார் பூமணி.

நாவலின் இன்னொரு முக்கிய பாத்திரம் மாடு மேய்ப்பவனாக வரும் கருப்பன். அப்பாவும், அம்மாவும் பேதி வந்து இறந்து போக அனாதையாக மணலூத்து வந்து சேரும் கருப்பன் ஊர்க்காரர்களின் மாடு மேய்க்கிறான்.முத்துமாரி பூப்படையும் போது அவளுக்கு தாய்மாமன் செய்யும் முறைமைகளை கருப்பன் தான் செய்கிறான்.

கருப்பனுக்கு முத்துமாரி மீது உள்ளூர வெளிப்படுத்த முடியாத ஒரு ஊமைக் காதல்.அவள் தூரமாய் வெளியூருக்கு வாக்கப்படுவதை அவன் விரும்புவதில்லை.ஆனாலும் கருப்பனுக்கு முத்துமாரி மீது ஒரு பெரிய அன்பும் அக்கறையும் உண்டு.
ஒரு வேளை முத்துமாரியை அழகிரி பகடை கருப்பனுக்கு கட்டிக் கொடுத்திருந்தால் அவள் மரணமடையாமல் இருந்திருப்பாளோ என்னவோ?

அடுத்து அழகிரியின் இரண்டாவது மனைவியாக வரும் ஆவடை பாத்திரம் அழகிரியைப் போல நல்ல குணமுள்ளவளாக வருகிறாள். முத்துமாரியை கொடுமைப்படுத்தாத ஒரு நல்ல சிற்றன்னை பாத்திரம்.தன் மனைவி காளி இறந்த பிறகு தன் குழந்தை முத்துமாரியுடன் மிகவும் கஷ்டப்படுகிறான்அழகிரி.
தன் முதலாளிக்கு மாடு பார்க்க சந்தைக்கு போகும் இடத்தில் ஆவுடையை பார்க்கிறான் அழகிரி.

ஆவுடையிடம் தன் முன் கதை அனைத்தையும் சொல்லி அழகிரி ஆவுடையை தன் மனைவியாக்கி கூட அழைத்துச் செல்வதை இப்படி பதிவு செய்கிறார் பூமணி
 "ஆற்றங்கரையில் பனை மரச் சலசலப்பினூடே அவர்கள் அந்த முடிவெடுக்கும் போது அவள் தகப்பனைப் பற்றிய நினைவை இரு சொட்டுக் கண்ணீரில் கரைத்து விட்டாள்.
அவன் துடைத்து விட்டான்"என்று.

நாவலில் காவக்காரர் கந்தையா என்ற பாத்திரம் முக்கியமானது. கந்தையாவுக்கும்,அழகிரிக்குமான உறவும்,நட்பும் சிறப்பாக கையாண்டுள்ளார் பூமணி.

மலம் கலந்த தண்ணீர் குடிக்கும் சக்கணன்,ஊரைச் சுரண்டும் அப்பையா என நிறைய மனதில் நிற்கும் மண் மனம் மாறாத மனிதர்களை நாவலின் ஊடாக நம் கண் முன் நிறுத்துகிறார் பூமணி.

இருப்பு மாறாத ஒரு கரிசல் கிராமத்தின் சித்திரத்தை எதார்த்தம் தொனித்த எழுத்தில் பதிவு செய்கிறார்.பூமணியின் படைப்புகளை தலித் இலக்கியம் என்ற வகைமைக்குள் அடைத்து பார்ப்பது தவறு என்றே எனக்கு தோன்றுகிறது. பூமணியின் படைப்புகளை நுட்பமாக வாசிப்பவர்களுக்கு புரியும் அவர் எழுத்துகள் அடிப்படையில் மனிதத்தை பேசுபவை என்று///

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்