///சுதந்திரத்துக்கு முன்பான காலத்தில்

கேரளாவின் தெற்கு திருவிதாங்கூரில் இருந்து வடக்கில் உள்ள மலபார் பகுதியின்  வயநாடு மலைப்பகுதிக்கு பிழைப்புக்காக குடியேறும் ஏழை கிருத்துவ குடும்பங்களின் வாழ்வுச் சிக்கல்களையும்,வதைகளையும் பதிவு செய்கிறது விஷக் கன்னி நாவல்.

தன்னை நம்பி பிழைக்க வந்த மனிதர்கள் மீது இயற்கை நிகழ்த்தும் கோரத்தாண்டவமே இந்நாவல் உணர்த்தும் பெரிய உண்மையாகும்.

இந்நாவலில் மிக முக்கிய பாத்திரங்கள் என மரியம்,அவளின் கணவன் மாத்தன், மாத்தனின் 9 வயது மகள்  மேரிக்குட்டி , ஒன்றரை வயது மகன் ஜானி, அந்தோணி, அந்தோணியின் சித்தப்பன் செரியான்,கிருஷ்ணன் நம்பியார், மாதவி,வர்க்கி,குரியன்,குரியன் மனைவி சாரம்மை,டீ கடைக்காரன் சாக்கோச்சன் என கூறலாம்.

மாத்தனின் மனைவி மரியம் குறுங்காடாய் இருக்கும் 20 ஏக்கர் சமமற்ற மலைப் பகுதியை வாங்கி கடுமையாய் உழைத்து சீர்படுத்தி மரவள்ளி கிழங்குச் செடி வைக்கிறாள்.மாத்தன் ஒரு சோம்பேறி மடையன். எஸ்.கே. பொற்றேக்காட் ஒரிடத்தில் இப்படி சொல்கிறார்
 "தோட்ட வேலைக்கு வரும் இரண்டு பனியர்களோடு,மாத்தனும் சேர்ந்து நிற்கும் போது இரண்டோடு சேர்த்து  மூன்று மடையர்கள் ஆனார்கள்" என்று.

மலபாரில் தான் 500 ஏக்கர்  நிலம் வாங்கியுள்ளதாக மரியம் திருவிதாங்கூரிலுள்ள ஏலியா மாமிக்கு தன் மகள் மேரிக்குட்டியை எழுதச் சொல்லி கடிதம் எழுதுகிறாள்.
சராசரி பெண்களைப் போலவே இல்லாத ஒன்றைச் சொல்லி ஏலியா மாமியை பொறாமைப்பட வைக்க பொய்க் கெளரவத்தை கடிதாசியில் அனுப்பி வைக்கிறாள் மரியம்.

மலை ஜுரம் எனப்படும் மலேரியா காய்ச்சலால் அதிகம் குயினா மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் கருக்கலைப்பு ஏற்பட்டு உதிரப்போக்கு அதிகமாகி மரித்துப் போகிறாள் மரியம்.தன் மகள் மேரிக்குட்டியும் ஜானியும் மலேரியா காய்ச்சல் வந்து இறந்து போகிறார்கள்.

மலபாரில் உள்ள வயநாட்டின் மலைப்பகுதியின் கன்னிநிலத்தில் எப்படியாவது விவசாயம் செய்து வாழ்ந்து விடலாம் என்று வந்தவர்களை தன் விஷ நாக்கில்  இழுத்துக் கொள்கிறது மலபார் மண்.

தான் வாங்கிய அத்தனை இடங்களையும் சீர்படுத்தி மரவள்ளிக்கிழங்கு முந்திரியும் வைத்துவிட்டு அதன் பலன் அனுபவிக்காமல் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நிலத்தை வாங்கியவரிடமே விற்றுவிட்டு 100 ரூபாய் வாங்கிக்கொண்டு திருவிதாங்கூர் சென்று விடலாம் என்று நினைக்கும் வர்க்கி கடைசியில் முந்திரி கிளையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்வது இயற்கையின் மிகப் பெரிய கோர ஆட்டம்.

மலபாரின் கிழக்கு குன்றில் தன் சித்தப்பா செரியனின் சொத்துக்களை பார்த்துக்கொள்ளும் அந்தோணி இந்நாவலின் மைய கதாபாத்திரம்.

அந்தோணி எப்பொழுதும் இயேசுவின் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பவன்.பைபிளை எப்பொழுதும் படித்துக் கொண்டே இருப்பான் ஒரு பரிசுத்த பாதிரியாராக ஆவது தான் அவனது லட்சியம் ஆனால் அவன் பரிசுத்த பாதிரியாராக ஆவதை ஒரு விஷக்கன்னி சீர்குலைத்து விடுகிறாள்.அவள் பெயர் மாதவி.

இந்நாவலில் இரண்டு விஷக்கன்னிகள் வருகிறார்கள்.ஒன்று இயற்கை இன்னொன்று;இந்த மாதவி.

மாதவி,கிருஷ்ணன் நம்பியாரின் விதவை மருமகள்.அவள் மலபார் வய நாட்டின் மேற்கு குன்றில் கிருஷ்ணன் தம்பியுடன் வசித்து வருகிறாள்.அந்தோணி மீது மாதவிக்கு எப்போதும் ஒரு தீராத மயக்கம்.அந்த மயக்கத்தை ஒரு மழை இரவில் அந்தோணியை மயக்கி அவள் தீர்த்துக் கொள்கிறாள்.

இப்படிப்பட்ட பாவச் செயலில் ஈடுபட்டதால் தான் ஒரு பரிசுத்த பாதிரியாராக ஆக முடியாது என அந்தோணி புலம்பி அழுகிறான்.

அந்தோணி அந்த நிகழ்விற்கு பிறகு மாதவியை வெறுக்கிறான் மாதவியோ வசிய மருந்துகள் செய்யும் கும்பா என்ற மாந்திரீக கிழவியிடம் அந்தோணியை மயக்க மருந்து வாங்குகிறாள். அந்த மருந்தை அந்தோணி இல்லாத நேரம் பார்த்து அவருடைய வீட்டுக்குச் சென்று அவன் சாப்பிடும் கஞ்சியிலும்,
வேக வைத்த மரவள்ளிக்  கிழங்கிலும் அதை கலந்து விடுகிறாள்.

 ஜான் என்பவனை தேடிச் செல்லும் அந்தோணி காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தன் சித்தப்பா திரும்பி வராததால் அவன் அங்கேயே தங்க நேரிடுகிறது.

அந்த தருணத்தில் கிழக்கிலுள்ள அந்தோணியின் வீட்டுக்கு தான் சென்று காவல் காப்பதாக வருகிறான் வர்க்கீஸ்.ஆனால் அன்று மறுநாள் முண்டக்காயம்வர்கீஸ் பிணமாக அந்தோணியின் குடிசையில் கிடக்கிறான்.

எப்படியாவது மலபார் வயநாட்டின் மலைப்பகுதியை சீர்செய்து வாழ்ந்து விடலாம் என்று வந்த பல குடும்பங்கள் மலேரியா சுரத்தால் மாண்டு போகிறார்கள். இருந்தும் இந்த மலைப்பதியை நோக்கி மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டே இருக்கிறார்கள்.

1800 ஏக்கர் வாங்கும் பால் என்பவனும், காரியஸ்தர் வரும் பாப்பச்சன் என்பவனும் வேறு ஒரு முதலாளியிடம் ஆறணாவுக்கு வேலைக்கு செல்லும் சாத்து என்ற பெரியவரிடம் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கூலியும் கஞ்சியும் கொடுக்கிறோம், எங்களிடம் வேலைக்கு வந்தால் என்று ஆசை காட்டி ஒரு மாதம் இரண்டு மாதம் மட்டும் அப்படி கூலி கொடுத்து விட்டு மீண்டும் பழையபடி ஒரு நாளைக்கான கூலியாக ஆறணாவை கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.

இப்படி பிழைக்க வந்த கிருத்துவர்களை ஒருபக்கம் இயற்கையும்,இன்னொரு பக்கம் மனிதர்களும் நாவல் முழுதும் சுரண்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

தான் கள்ள நோட்டு அடிப்பது தெரிந்ததால் வேட்டைக்கு கூட வந்த வர்க்கீசை செரியான் சுட்டுக் கொன்றுவிடுவதால் ஜெயிலுக்குள் போய் விடுகிறான் செரியான்.

திருவிதாங்கூரில் இருந்து மலபாரின் வயநாட்டின் மலைக்கு வந்து வாழ்ந்து விடலாம் என்ற கனவுகளோடு இருந்த  அண்ணாச்சி என அழைக்கப்படும் கிறித்துவ குடும்பங்களை இயற்கை என்னும் விஷக்கன்னி மாய்க்கிறாள்.

இயேசுவின் கிருபையை அடைந்து பாதிரியாராக நினைக்கும் அந்தோணியின் கனவை மாதவி என்னும் விஷக்கன்னி கலைத்து விடுகிறாள்.

இரண்டு விஷக்கன்னிகளையும் துறந்து வண்டிக்காரனுடனும்,மாத்தனுடனும் அந்தோணி பைபிளை படித்தவாறே திருவிதாங்கூருக்கு செல்வதாக நாவல் முடிகிறது.

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பஞ்சம் பிழைக்க குடியேறிய கிருத்துவர்களின் வாழ்வில் இயற்கை ஆடும் மிகப்பெரிய சீட்டாட்டம் தான் இந்த விஷக்கன்னி நாவல்.குறிஞ்சிவேலன் தமிழ் மொழிபெயர்ப்பு மிக அபாரம்///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்