///எஸ்.எல் பைரப்பாவின்
"ஒரு குடும்பம் சிதைகிறது" என்ற கன்னட நாவலை சுமார் இருநூற்று எழுபத்து நான்கு பக்கங்கள் கடந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த மாதம் நான் கர்நாடக மாநிலத்திற்கு பயணம் சென்ற போது பார்த்த இடங்களான மைசூர், தும்கூர்,ஹாசன் மாவட்டம்,
சென்னராயப்பட்டணம்,கம்பனகெரே, போன்ற பகுதிகள் தான் நாவலின் கதை நிகழும் களங்கள்.

பிராமண குடும்பத்தில் நிகழும் குடும்ப அக சிக்கல்கள்,அவர்களின் வாழ்வியல், வறுமை,வலி,அவர்கள் படும் வாதை தான் நாவலின் நடு மையம்.ஒரு கிராமத்தை,அதன் மண்ணை,அதன் மனிதர்களை அதன் அசல் முகம் மாறாமல் எழுத்தாக்கியுள்ளார் பைரப்பா.

நாவலைப் படித்த வரை நம்மை தூக்கி துயரத்தில் ஆழ்த்துகிறது.பாலுணர்வு என்றால் என்னவென்றே தெரியாத வயதில் திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளுக்கு தாயான பெண் பாலுணர்வு பற்றிய புரிதல் தொடங்கும் 25 வயதில் தன் கணவரை இழந்து விதவையாய் போன எப்போதும் எண்ணெயில் இட்ட கடுகென வெடிந்து எல்லோரையும் சபித்துக் கொண்டே இருக்கும் கங்கம்மா,

புத்திகெட்ட கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு அறத்துடனும், வறுமையுடன் வாழும் நஞ்சம்மா.
பொய் வழக்குகளில் சாட்சி சொல்லி சூதாடி மற்றவரை ஏமாற்றி வாழும் ரேவண்ண செட்டியின் மனைவி சர்வக்கா,ரேவண்ண செட்டி மலையாளத்தானிடம் கடன் வாங்கியதற்காக தன் மகளையே கூட்டிக்கொடுத்து அவள் கர்ப்பமாகி கர்ப்பம் கலைக்க கொடுத்த மருந்தால் அதிக உதிரம் போய் இறந்து விடும 13 வயது ருத்ராணி,அப்பண்ணய்யாவின் மனைவி சாதம்மா என பெண்களின் பெருந்துயர் பேசி நகர்கிறது நாவல்.

நாவலில் பிராமணர்களை மிகவும் எளிமையாக எதார்த்தமாக சித்தரித்துள்ளார் பைரப்பா.

பொதுவான சிந்தனையில் இருந்து சற்று விலகி இதில் பிராமணர்களே மற்ற பிராமணர்களை ஏமாற்றுபவர்களாகவும் வறுமையின் காரணமாக பிற சாதியினரிடம் யாசித்து வாழ்பவர்களாகவும் காட்டியுள்ளார்.

பிராமண ஆச்சாரங்களை, பிராமணர்களின் அறிவை அத்துணையும் உடைத்து அவர்களை தூக்கி பிடிக்காமல் எல்லோரையும் போல எளிமையான மனிதர்களாக சித்தரித்துள்ளார்.

மிக எளிய சொல்லாடலில் மண்ணையும் மனிதர்களையும் அவர்களின் இருப்பு மாறாத நிறத்தில் நாவல் பேசி செல்கிறது.வாசிக்க வாசிக்க மனதில் மன அவஸ்தையை பின்னும் நாவல் ஒரு குடும்பம் சிதைகிறது.இன்னும் வாசிக்கவும் பேசவும் இருக்கிறது///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்