///மனித சமத்துவத்தை வலியுறுத்தும் #மகாமுனி#

திராவிட அரசியல்,ஆன்மீகம்,மதம்,
மனித மனங்களின் சாதிய வன்மங்கள், துரோகம்,பழிவாங்கல் என நாம் அறிந்த விஷயங்களை சற்றே சராசரி தமிழ் படங்களிலிருந்து விலகி நின்று வித்தியாச காட்சி அமைப்புகளில் பேசுகிறது மகாமுனி.

ஒரு கருவில் உருவான இரு உருவங்கள் வெவ்வேறு சூழலில் வளர்க்கப்படுவதையும்,
அவர்களின் வாழ்வியலே கதை என்றாலும் அதை நேர்த்தியான திரைக்கதையிலும் கனமான காட்சியமைப்பிலும் கவனம் ஈர்க்க வைக்கிறார் சாந்தகுமார்.

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அரசியல்வாதிகளுக்கு கொலை நிகழ்த்த வடிவம் கொடுக்கும் ரவுடி அடியாளின் பாத்திர அமைப்பு,மேனரிஷம்,நடிப்பு என  மகாவாக வரும் ஆர்யாவின் நடிப்பு சூப்பர்.

ஆர்யாவின் மனைவியாக வரும் இந்துஜாவின் நடிப்பு எதார்த்தம் மீறாத நடிப்பு.நம் பக்கத்து வீட்டுப் பெண்ணை திரையில் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறார் இந்துஜா.

ஒரு மஞ்சள் நிற புடவையை கட்டிக்கொண்டு  ஆர்யாவின் முன் வந்து நின்று இது எப்படி இருக்கிறது என்று இந்துஜா கேட்கும்போது,புடவை ஏது? எப்படி எடுத்த என்று கேட்பதற்கு  தவணை முறையில் தான் எடுத்தேன் இன்னும் பணம் கொடுக்கவில்லை என இந்துஜா சொல்லும்போது  பீரோவில் வைக்க இடமில்லாத அளவுக்கு புடவை இருக்கும்போது  எதுக்கு புதுப் புடவை என ஆர்யா கேட்க   ஒரு புடவை கூட நல்லா இல்ல  என இந்துஜா கூறும்போது  எனக்கு ஒன்னும் புரியல  புடவை எடுக்க கடைக்கு போயிட்டு மணிக்கணக்கா தடவிப் பார்த்து பிதுக்கி பார்த்து நீதான் எடுக்கிற அப்புறம் எப்படி நல்லா இல்லாம,புடிக்காம போகும் என ஆர்யா கேட்கும்போது  கணவர்களின் அத்தனைக் கஷ்டமும்  அந்த வசனத்தில் தெரிகிறது.

தான் ரவுடியாக இருந்தாலும்  தன் மகனை கன்னத்தில் அடித்து விட்ட  பள்ளிக்குச் சென்று  பள்ளி முதல்வரை அணுகும் விதமும், தான் ஒரு மகிழுந்து  வாடகை இயக்குனராக  வாடிக்கையாளர்களை  மகிழுந்தில் ஏற்றிக்கொண்டு  இருக்கும்போது  ஒருவன்  மகிழுந்தின் பின்புற வாகனங்களை பார்க்கும் கண்ணாடியை  உடைத்து விட்டு செல்லும்போது கோபப்படாமல்  இருப்பது என  ஒரு வித்தியாச ரவுடியை கண்முன் நிறுத்துகிறார்  இயக்குனர்.

தன் மகன் ஐஸ்கிரீம் சாப்பிடும் கடையில்  ரவுடிகள் சண்டையிடும் போது  ரவுடிகள் பற்றி  ஆர்யா கொடுக்கும் விளக்கம்  அபாரம்.உண்மையான ரவுடி  தன்னை ரவுடி என வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்.

காஞ்சிபுரத்திலிருந்து அப்படியே கதை ஈரோடு கட்டப்ப நாயக்கன்பாளையம் நகர்கிறது. ஆன்மீகம், இயற்கை விவசாயம், பிள்ளைகளுக்கு கல்வி போதிப்பது என சாதுவான கதாபாத்திரத்தில் இன்னொரு ஆர்யா முனிராஜ் பாத்திரத்தில்.

சமூகத்தில் தலித்துகள் உயிர்வாழ்தலில் உள்ள முரண்களை முனிராஜ் கதாபாத்திரம் வழியாக பேசுகிறார் இயக்குனர்.சாதி வெறியின் கோரத்தை ஜெயபிரகாஷ் பாத்திரம் வழியாக காட்சிப்படுத்துகிறார்.

நீ ஆன்மீகவாதியாக இரு,ஆச்சாரமாக இரு,திருநீர் இட்டுக் கொள்,ஒழுக்கமாக இரு,சாந்தமாக இரு ,அதுவல்ல விஷயம் நீ பிறப்பால் தாழ்ந்தவன் என்பதே ஜெயபிரகாஷ் கதாபாத்திரம் போன்ற சாதி வெறி பிடித்தவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

முனிராஜ்ஜை கொத்தும் ஒற்றை பாம்பு என்பது வெறும் பாம்பு அல்ல.அது மனமெல்லாம் சாதி விஷம் நிரப்பி வைத்திருக்கும் இச்சாதிய சமூக மனிதர்களுக்கான குறியீடு அது.

வசனங்கள் வாய் பிளக்க வைக்கின்றன

"அரசியல் இருந்தா சம்பாதிக்க தெரியணும்,கமிஷன் கரெக்டா வருதான்னு தெரிஞ்சுக்கணும், ராமாயணத்தை எழுதினது சேக்கிழார்னு தெரிஞ்சுக்க வேண்டியது இல்லை "

"வாய் வழியா வார்த்தையா பேளற நீ"

"பிளாஸ்டிக் மாதிரிதான் இந்த ஜாதியும் ஒழிக்க முடியாததா  இருக்கு"

''நாமெல்லாம் மிருகமா இருந்தப்போ உணவும் இனப்பெருக்கமும் மட்டுமே தேவையா இருந்துச்சு. அதுல கொஞ்சம் மிருகங்கள் சிந்திக்க ஆரம்பிச்சது. அப்படிப்பட்ட மிருகங்களுக்கு மனுஷங்கன்னு பின்னால பேர் வெச்சிக்கிட்டாங்க.அந்த மனுஷங்களுக்கு மிருகங்கள்கிட்ட இல்லாத பேராசை,போட்டி,பொறாமை, வஞ்சம்னு நிறைய குணங்கள் சேர்ந்துடுச்சு, மனுஷனோட மனசும் நிம்மதி இழந்துடுச்சு''

"ஒருத்தன் பொறந்ததுல இருந்து சாவுற வரைக்கும் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தாங்கிறதை வைச்சுதான் அவன் சந்ததி செத்தவங்களோட நல்லது,கெட்டதை தூக்கிச் சுமக்க வேண்டி வரும்.
அவன் சந்ததி நல்லதை சுமக்கப்போவதா,கெட்டதைச் சுமக்கப்போவதாங்கிறதுதான் அந்தக் கணக்கு'' என நிறைய வசனங்கள்.

சமூக ஊடகங்கள் வழியாக சுயசாதி பெருமை,சுயசாதி வீரம் பேசுவதற்கு மாணவர்களுக்கு முனிராஜாக வரும் ஆர்யா கொடுக்கும் விளக்கம் அருமை.

இதழியல் படிக்கும் மாணவியாக, ஜெயப்பிரகாஷ் இரண்டாவது மனைவியின் மகளாக வரும் மகிமா நம்பியாரின் பாத்திர வார்ப்பு,உடல் மொழி,நடிப்பு அவ்வளவு நேர்த்தி.
மகிமா நம்பியாரின் வீட்டு அறைச் சுவரில் பெரியார் புகைப்படம்,
பூலான் தேவி புகைப்படம் ஒட்ட வைக்கப்பட்டுள்ளதின் வழியாக மகிமா நம்பியாரின் குணத்தை நிறுவுகிறார் இயக்குனர் சாந்தகுமார்.

முனிராஜாக வரும்  ஆர்யாவின் லைப்ரரியின் சுவரில் மூன்று புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ள காட்சி இரண்டு நொடிகள் மட்டும் திரையில் வரும்.அந்தப் புகைப்படங்கள் இடமிருந்து அம்பேத்கர் புத்த மதம் திரும்பும் புத்த பிக்கு உருவில் உள்ள படம்,
இரண்டாவது நாராயண குரு,
மூன்றாவது விவேகானந்தர் படம் முழுக்க நிறைய குறியீடுகள்.

சாதியை எதிர்ப்பதும்,மதத்தை ஏற்றுக்கொள்வதுமான ஒரு குழப்பம் இருக்கவே செய்கிறது படத்தில்.

மனித மனம் எதிலும் நிலை கொள்வதில்லை.இந்த உலகில் சிறந்த மதம் என்று எதுவும் இல்லை.
மனிதமே சிறந்த மதம் என்கிறது மகாமுனி.

அதர்மத்தின் முகமாக வரும் மகா என்பவனின் வாழ்வையும் அறத்தின் முகமாக வரும் முனி என்பவனின் வாழ்க்கையையும் ஒரு புள்ளியில் சேர்க்க கதையில் நிகழும் அரசியல்,கொலை,பழி வாங்கல்,அழுகை போராட்டமே மகாமுனி.

மகா என நினைத்து முனிராஜ் கொள்ளப்படுவதால் இறுதிக்காட்சியில் மகாவிடம் உன்னை எங்கயோ பார்த்திருக்கேனே உன் பேரு என்ன என ஒருவன் கேட்பதற்கு மகாமுனி என சொல்லி விட்டு திருக்குறளின் அறத்துப்பாலின் தெளிவுரையையும்,கத்தியையும் ஒன்றாக சேர்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு தன் மகனையும்,
அம்மாவையும் பார்க்க ஆற்றில் அடுத்த கரை நோக்கி நெடுந்தூரம் நீந்துவதாய்
நிறைவடைகிறது படம்///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்