/// "ஒரு குடும்பம் சிதைகிறது"
கன்னட நாவலை முன்வைத்து

இந்திய இலக்கியங்களில் கன்னட மொழியினுடைய பங்களிப்பு என்பது கொஞ்சம் அடர்த்தியானது.
சிவராம் காரந்த் அவர்களின்
"மண்ணும் மனிதரும்", "அழிந்த பிறகு"  யு.ஆர்.அனந்தமூர்த்தியின்
 "சம்ஸ்காரா"
அரவிந்த் மாளகத்தியின்
"கவர்ன்மெண்ட் பிராமணன்"
விவேக் ஷான்பாக் அவர்களின்
 "காச்சர் கோச்சர்" நாவல் ஆகிய படைப்புகளை வாசித்ததின் மூலமே கன்னட இலக்கியங்கள் மீது எனக்கு பெரும் ஈர்ப்பும்,மரியாதையும் உண்டானது.

 எஸ்.எல்.பைரப்பாவின்
"ஒரு குடும்பம் சிதைகிறது"  நாவல் என்பது சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் வாழ்ந்த கன்னட பிராமண குடும்பமொன்றின் சிதைவை விவரிக்கிறது.

மைசூர் சமஸ்தானத்தின் தும்கூர் ஜில்லா,திப்டூர் தாலுகா,கம்பனகரே பிர்காவில் இறந்துபோன பிராமண கணக்குப்பிள்ளை ராமண்ணனுடைய இரண்டாவது மனைவி கங்கம்மா தன் மூத்த மகன் சென்னிகராயனையும்,
இளைய மகன் அப்பண்ணய்யாவையும் திட்டுவதில் ஆரம்பிக்கிறது நாவல்.

அப்பண்ணா மடத்துக்குப் போய் படி என்று சொல்லும் கங்கம்மாவை போகாட்டி உனக்கு என்னடி முண்ட கழுதை? என்கிறான் இளைய மகன் அப்பண்ணய்யா. கங்கம்மா என்னையா முண்டையின்னு சொல்ற உன் வம்சம்  அழிந்து போகுதா? இல்லையா? பாருடா தேவிடியா மகனே என்று சபிக்கிறாள்.
அவள் சபிக்கும் சாபம் போன்றே கடைசியில் அந்த குடும்பமே சிதைந்து விடுகிறது.

தன் வீட்டின் கூரை மீது ஏறி ஒட்டை உடைத்து விட்டு கங்கம்மாவுக்கு பயந்து சென்னிகராயனும்,அப்பண்ணய்யாவும் கரும்பு தோட்டத்துக்குள் ஒழிந்திருக்கும் போது கரும்பு தோட்டத்துக்கு நெருப்பு வைத்து விடுகிறார்கள்.

அவர்கள் இருவரையும் பிடித்து ஊர் மணியக்காரர் சிவே கவுடன் யாருடா தோட்டத்துக்கு நெருப்பு வைத்து என்று கேட்கும்போது சென்னிகராயன் நான் வைக்கல என் தம்பி அப்பண்ணய்யா தான் வைத்தான் என்று சொல்லி மாட்டிவிடுகிறான்.
இதுதான் இந்த தட்டிக்கழிக்கும்,
அடுத்தவர் மீது குறை சொல்லும்,சுயநலகுணம் தான் சென்னிகராயர் என்று நாவலின் முதலிலேயே பைரப்பா பதிவு செய்கிறார்.

இந்த நாவலின் முழுமைக்கும் வரும் எதிர் உருவம்,எப்போதும் எல்லோரையும் சபித்துக் கொண்டும், பெற்ற பிள்ளைகளையே தேவிடியா மகன்களே என்று எண்ணெய்யில் இட்ட கடுகு என நாவல் முழுமைக்கும் வெடித்துக் கொண்டே இருக்கிறாள் கங்கம்மா.

கங்கம்மா ராமச்சந்திர கிராமத்தின் பக்கத்து கிராமமான ஜாவக்கல்லைச் சேர்ந்தவள்.சென்னிகராயனுடைய அப்பா ராமண்ணன் இரண்டாந்தாரமாக கங்கம்மாவை திருமணம் செய்து கொள்ளும் போது அவளுடைய வயது பதிமூன்று.ராமண்ணனுக்கு வயது 45.

கங்கம்மா 25 வயதில் விதவையாகிறாள். அந்த விரக்தி,நீடிக்காமல் போன வாழ்வின் நிராசை அவள் உள்ளத்தில் ஒரு வெறியாக மாறி நாவல் முழுவதும் மகன்களை,மருமகள்களை,
தன் சொத்தை ஏமாற்றும் சிவேகவுடனை, ஊர்க்காரர்களை சபித்துக் கொண்டே இருக்கிறாள்.

நாம் பொதுப்புத்தியில் வைத்திருக்கும் பிராமணர்களின் மீதான எல்லா கற்பிதங்களையும் உடைத்து விடுகிறார் பைரப்பா.பிராமணர்கள் என்றாலே அறிவாளிகள் என்றிருக்கும் சமூக கற்பித்ததை முட்டாள்களான சென்னிகராயர்,அப்பண்ணய்யா மூலம் உடைக்கிறார்.

பிராமணர்கள்ஆச்சாரத்தோடும்,
ஒழுங்கோடும் இருப்பவர்கள் என்பதையும் தாண்டி கங்கம்மா பாத்திரம் வழியே அவர்களும் சாதாரண மனிதர்கள் என நிறுவுகிறார் பைரப்பா.

தன் மருமகள் நஞ்சம்மா  தலை மீது கோபமாக ராகிமாவு கொட்டுவதும், அப்பண்ணய்யாவை தூண்டிவிட்டு அண்ணி நஞ்சம்மாவை உதைக்க வைக்கும் இடங்களில் மனமெங்கும் கங்கம்மா மீது ஒரு கோபமும்,வெறுப்பும் நாவல் வாசிக்கும்  நமக்கு திரண்டு வருகிறது.

கடைசி வரை கங்கம்மாவின் வாயிலிருந்து வெறுப்பும்,கசப்பும் தோய்ந்த வார்த்தைகளே வந்து விழுகிறது.நஞ்சம்மாவையும்,
சாதம்மாவையும் அவ்வளவு கொடுமை செய்கிறாள் கங்கம்மா.கங்கம்மா கடைசிவரை மாறுவதே இல்லை.
அவள் அவளாகவே இருக்கிறாள் என்ற பாத்திர வார்ப்பில் பைரப்பாவின் எதார்த்த கலை நுணுக்கத்தைக் காணலாம்.

அன்பு,பரிவு,கருணை, பொறுமை,புத்திசாலித்தனம் என அத்தனை வார்த்தைகளின் வடிவமாக இந்த நாவலின் மையச்சரடாக வருபவர் சென்னிகராயரின் மனைவி நாகலாபுரம் கண்டி ஜோசியரின் மகள் நஞ்சம்மா.

நம் இந்திய குடும்ப மரபில் காலங்காலமாக குடும்பத்திற்காக உழைத்து,சுகங்களைத் துறந்து சுமைகளை சுமந்து,சுரண்டப்பட்ட நம் பாட்டி,அம்மா என பல பெண் உறவுகளின் படிமமாக இந்நாவலில் வரும் நஞ்சம்மா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் தன் மாமியார் கங்கம்மாவின் கொடுமை,கோழைத்தனமும்,சுயநலமும் உருவான கணவன் சென்னிகராயர்,தன் அண்ணி கமலாவின் கொடுமை என பிறந்த வீடு,புகுந்த வீடு என எல்லா பக்கங்களும் துயர் சூழ்ந்த வாழ்வாகவே இருக்கிறது நஞ்சம்மாவுக்கு.

தன் கணவருக்கு எதுவுமே தெரியாத கணக்குப்பிள்ளை வேலையையும் சேர்த்து பார்க்கும் நஞ்சம்மா புரச இலை தைத்து தன் பிள்ளைகள் பார்வதி, ராமண்ணன்,விசுவன் ஆகியோரை கஷ்டப்பட்டு வளர்க்கிறார்.

மனிதர்கள் சக மனிதர்களுக்கு ஏற்படுத்தும் நெருக்கடி போல இயற்கையும் அவ்வப்போது தன் நெருக்கடியை,கோரத்தை இந்நாவலின் கிராமமக்கள் மீது ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

ஒருகட்டத்தில் நஞ்சம்மாவின் திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத மகள் பார்வதியும்,
அவருடைய இரண்டாவது மகன் ராமண்ணனும் பிளேக் நோயின் கோரப்பசிக்கு  ஆளாகி ஒரே நாளில் மாண்டு போகிறார்கள்.

நாவலின் உச்ச பச்சாத்தாபமாக இருக்கிறது குழந்தைகள் இருவரும் இறந்து போவது. நஞ்சம்மாவின் மூன்றாவது மகன் விசாகனுக்கும் பிளேக் நோய் வருகிறது.ஆனால் அதிலிருந்து அவன் மட்டும் பிழைத்துக் கொள்கிறான்.

இறுதியில் நஞ்சம்மாவும் நோய் வந்து இறந்து போகிறாள்.அவளுக்குப் பின் அவனுடைய பாட்டி அக்கம்மாவும்,
பிளேக் நோயினால் இறந்து போகிறார். நஞ்சம்மா வாழ்வு போராட்டம் என்பது
என்ன முடியாத மழைத்துளிகளை போல பெரும் துயர்களால் சூழப்பட்டது.

நஞ்சம்மாள் அறவுணர்வும்,கருணையும் கொண்டவள்.தன் வீட்டில் ஒரு முறை தன் மாமியார் கங்கம்மா ராகி மாவு எடுக்க வரும் போது நஞ்சம்மா எடுக்காதீங்க என்று சொல்லி விடுகிறாள்.

ஆனாலும் மனசு கேட்க்காமல் சென்னிகராயரிடம் ராகி மாவு கொடுத்தனுப்புகிறாள்.ஆனால் கங்கம்மா அதை எடுத்து வந்து நஞ்சம்மா தலை மீது கொட்டி விடுகிறாள். அப்பொழுதும் நஞ்சம்மா பொறுமையாகவே இருக்கிறாள்.

ஒரு முறை பக்கத்து ஊருக்கு பள்ளிக்குச் சென்ற தன் மகன் ராமண்ணன் நெடுநேரம் ஆகியும் திரும்பி வராததால் பையன் பாம்பு புற்றுகளை எல்லாம் தாண்டி வர வேண்டும், ஒருவேளை பாம்பு ஏதாவது பையனை கடித்திருக்குமோ, பேய் ஏதாவது என எண்ணி பயந்து கொண்டே பையனைத் தேடி போகும் போது இருட்டில் தலை மீது மூன்று பலாக்காய்களை எடுத்துக் கொண்டு வரும் ராமண்ணன் தன் தாயிடம் வரும் வழியில் பக்கத்து தோட்டத்தில் பறித்ததாக கூறுகிறான்.

ஆனால் நஞ்சம்மா ராமண்ணனை ஏன் திருடினாய் என கேட்பதில்லை.அந்த பலாக்காய்களை வெட்டி வேக வைத்து தின்கிறார்கள்.அவர்கள் வீட்டில் அவ்வளவு பஞ்சம், பசி.

மனித அற உணர்வுகளையே மழுங்கச் செய்கிறது பஞ்சமும்,பசியும்.

நாவலைப் படித்து முடிக்கையில் நஞ்சம்மா ஒரு தியாகத் தாயின் உருவம் என நம் நெஞ்சில் நிற்கிறாள்.
இந்த வாழ்வும் இயற்கையின் முதுகில் ஏறி வரும் பிளேக் நோயும் கடைசி வரை நஞ்சம்மாவை வாழ விடாமல் சுரண்டி தின்று விடுகிறது.

நாவலில் எதிர்மறை எண்ணம் கொண்ட பாத்திரமாக மணியக்காரர் சிவேகவுடா, எல்லோரையும் ஏமாற்றிப் பிழைக்கும் பிராமணராக அண்ணா ஜோசியர், ரேவண்ண செட்டி என சில பேரும் இடம் பெறுகிறார்கள்.

நஞ்சம்மாவிற்கு மிகவும் உதவியாக இருக்கும் குண்டே கவுடர் நஞ்சம்மா இறக்கும் அதே நாளில் பிளேக் நோய் வந்து இறக்கிறார்.
நாவல் படிக்கும் போது நம் அத்தனை எரிச்சலையும்,கோபத்தையும் தூக்கி சுமக்கும் ஒரு பாத்திரமாக சென்னிகராயர். தன் மூன்று குழந்தைகளும் பிளேக் வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது குண்டா நிறைய சாப்பாடு போட்டு சாப்பிடும் போதும், சிருங்கேரிக்கு போகும் போது ஓட்டலில் தோசை சாப்பிடும் போது தன் மகன் விசுவன் அப்பா எனக்கும் ஒரு தோசை என கேட்கும் போது போடா போயி அம்மாகிட்ட சாப்பிடுன்னு சொல்லிவிட்டு ஓட்டல்காரனிடம் இந்தப் பையன் யாருண்ணே தெரியாது என்று சொல்லும் போது இப்படி  ஒரு கேவலமான மனுஷனா என எண்ணத் தோன்றுகிறது.

எந்த வித அறமும்,அறிவும் இல்லாத ஒரு சுயநலம் பிடித்த சோம்பேறியாக, கோழையாக வாழும் ஒரு பாத்திரம் சென்னிகராயர்.

மாதேவய்யா கடைசியில் விசுவனை தன்னுடன் கூட்டிக் கொண்டு ஊரை விட்டு செல்லும் போது வழியில் படுத்துக் கொண்டிருக்கும் சென்னிகராயதைப் பார்த்து விட்டு மாதேவய்யாவிடம் அய்யா அது என் அப்பா தானே? என கேட்கும் போது சென்னிகராயர் தலையைத் தூக்கி பார்த்து விட்டு வாய்த் திறக்க முயற்சிக்கிறார்.

ஆனால் வாயில் ஊறிய புகையிலை கீழே வழிந்து விட்டால் வேறு புகையிலை போடுவதற்கு இல்லை என்பதால் வாய் திறக்காமல் படுத்து கொள்ளும் ஒரு மகா அற்ப சுயநல மனிதனாகவே கடைசி வரை இருக்கிறார் சென்னிகராயர்.
கண்டி ஜோசியரின் மகன் கல்லே சன் தன் தந்தை போலவே மூர்க்கமாக செயல்படுகிறார்.கிராமம் பிடிக்காத தன் மனைவி கமலாவை கண்டபடி அடிக்கிறான்.கடைசி வரையில் அவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போகிறது.
சென்னன் செட்டியின் மருமகள் நரசி எனப்படும் நரசம்மாள் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் பல பேரின் பசி போக்கும் பாத்திரமாக வந்தாலும் மனிதநேயமுள்ளவளாக இருக்கிறாள்.

அப்பண்ணய்யா தன் அம்மா கங்கம்மா பேச்சை கேட்டு கடைசி குழந்தை ராமகிருஷ்ணன் என் மகனுக்கு பிறக்கவில்லை.அந்த தேவிடியா வேற யாருக்கோ பெத்துட்டு வந்திருக்கா என்று சொல்லி அப்பண்ணய்யாவை வெறி ஏற்றி சாதம்மாவின் வீட்டை கொளுத்தி அடித்து விரட்ட வைக்கிறாள்.

ஒரு கட்டத்தில் அப்பண்ணய்யா திருந்தி தன் குடும்பத்தை காண செல்கிறான். அப்போது வாசலில் உள்ள 13 வயது பெண் ஜெயலட்சுமி தன் மகள் என கண்டு கொள்கிறான்.

அந்த குழந்தையிடம் நான் உன் அப்பா என்று சொல்லும் போது எந்த ஊர் அப்பா ? என குழந்தை கேட்டவுடன் உள்ளே சென்று பார்த்த அப்பண்ணய்யா அங்கு சாதம்மாவுடன் வேறு ஒருவன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சாதம்மா நான் உன் புருஷன் எனும் போது அந்த ஆள் அடிக்க வர அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து விடுகிறான் அப்பண்ணய்யா.
எந்த ஊர் அப்பா? என்ற குழந்தையின் கேள்வியில் சாதம்மாவின் ஒழுக்கத்தை சொல்லி விடுகிறார் பைரப்பா.

சியாமண்ணாவை ரத்தம் வர அடிக்கும் போது கீழே சுருண்டு விழுந்து விடுவதால் இறந்து விட்டான் என எண்ணி பயந்து ஊரை விட்டே ஓடி விடுகிறார் கண்டி ஜோசியர்.பின் 12 வருடங்கள் கழித்து வரும் போது தன் மகன் கல்லேசனுடன் சண்டைக்கு வரும் சியாமண்ணா தலை மீது மனித மலத்தை கரைத்து ஊற்றி அவனை அவமானப் படுத்தி 12 வருட பழியை தீர்த்துக் கொள்கிறார்.

கமலாவுக்கு அதுவும் இதுவும் என சொல்லி குடும்பம் கெடுத்திக் கொண்டிருக்கும் சியாமண்ணாவின் மருமகள் புட்ட கெளரியின் பாத்திரம் எல்லா ஊர்களிலும் உள்ள ஏதோ ஒரு பெண்ணின் வடிவம்.

நஞ்சம்மாவின் சிநேகிதியாக வரும் ரேவண்ண செட்டியின் மனைவி சர்வக்கா தன் 13 வயது மகள் ருத்ராணியை தகப்பனே வாங்கிய கடனுக்காக மகளை மலையாளத் தானுக்கு கூட்டி கொடுப்பதால் அவள் கர்பமாகிறாள்.கர்பம் கலைக்க மருந்து சாப்பிட்டதால் அதீத உதிரப்போக்கால் ருத்ராணி மரணித்துப் போவது அதிர்ச்சியாக்குகிறது நம்மை.

நாவலில் நஞ்சம்மாவிற்கு கடைசி வரை உதவியாக இருக்கும் துறவியாக வரும் மாதேவய்யா பாத்திரம் மிக முக்கியமான பாத்திரம். இடையில் மாதேவய்யா ஊரை விட்டு சென்று விடுகிறார்.
அவர் சென்ற பிறகு ஊரை அவ்வளவு பஞ்சம் வாட்டுகிறது.
பிறகு மீண்டும் அவர் ஊருக்குள் நுழையும் போது மழை வருகிறது. நஞ்சம்மாவின் எல்லா துக்கங்களிலும் பங்கெடுக்கிறார் மாதேவய்யா.

தாய்மாமன் கல்லேசனின் கோபம், மாமன் மனைவி கமலா விசுவனை பாத்திரம் கழுவ வைத்தும்,ஏரியில் தண்ணீர் எடுத்து வரச் சொல்லியும் கொடுமைபடுத்துவதால் கண்டி ஜோசியர்,கல்லேசன் அனுமதியுடன் விசுவனை பிராமணரல்லாத மாதேவய்யா தன்னுடன் கூட்டிக் கொண்டு ஊரை விட்டு செல்வதுடன் நாவல் முடிகிறது.

காலங்காலமாக பெண்களின் மீது வாழ்க்கை சுமத்தும் பெரும் துயரங்களை, பெண்களை சுரண்டும் குடும்ப அமைப்பின் சிக்கல்களை பெருங்கதை வடிவில் பேசுகிறது இந்நாவல்///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்