///சுரேஷ் பிரதீப்பின் "கசப்பு" சிறுகதையை முன்வைத்து

இலக்கியம் என்பது மனித உணர்வுகளின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.மனித ஆழ் மனங்களின் அவதி,மனம் அதன் ஆழ்ப்பரப்பில் நிரப்பி வைத்திருக்கும்  கீழ்மைகள் என அத்தனையையும் நிஜத்திற்கு நெருக்கமாய் எழுத்தாக்கி இலக்கியம் செய்யும் கலை ஒரு சிலருக்கே கை வரக்கூடியது.

அதில் சுரேஷ் நல்ல இலக்கியம் செய்யக் கூடிய ஒரு சிலரில்  எப்போதும் முதலிடத்தில் இருக்கிறார்.

சுவரின் சிறு விரிசலில் நுழையும் எறும்பு போல பெண்களின் மனச் சுவர்களில் நுழைந்து அவர்களின் மன அந்தரங்களின்
வெறுமையை,வலியை,கசப்பை,
காழ்ப்பை,பள்ளங்களை தனக்கான எழுத்தாக்கி கொள்கிறார் சுரேஷ்.

மனித மனம் எப்பொழுதும் தனக்கான உச்சகட்ட வெற்றி எனவும், களிப்பெனவும் கொள்வது தன் மனம் வெறுக்கும் சக ஒருவரின் ஒட்டு மொத்த வீழ்ச்சியையே.

"கசப்பு" கதையில் வரும் பாரதி பாத்திரம் ஒட்டுமொத்த பெண் மனங்களில் மண்டிக்கிடக்கும் கசப்பின் பிரதிநிதி.

தன்மேனிவனப்பு,பொருளாதாரம்,
அலுவலக மதிப்பு என எல்லாவற்றிலும் பாரதியை விட தன் சக அலுவலகியான மிருதுளாவே தன்னை விட உயர்ந்து நிற்கிறாள் என பாரதியின் மனம் முழுதும் அவளுக்கெதிராக கசப்பேற்றிக்  கொள்கிறது.

மிருதுளா மீதான பாரதியின் வெறுப்பானது அவளை ஏதாவது ஒரு புள்ளியில் வீழ்த்திவிட துடிக்கிறது.

தன் அலுவலகத்தில் புதிதாக சேரும் ஒரு பெண்ணுடன் மிருதளாவுக்கு ஓரினச்சேர்க்கை தொடர்பு இருக்கிறது என மிருதுளாவை மிரட்டி பாரதி தனக்கு கீழ் பணிய வைக்கிறாள்.

மனித மனம் எப்பொழுதுமே தனக்கு எதிரில் இருப்பவர்களின் பலவீனங்களை கீறி அதில் அவர்களை பணிய வைக்கிறது.தன் மகன் வினய் படிக்கும் பள்ளியை விட சாதாரண பள்ளியில் மிருதுளாவின் மகளை சேர்க்க வைக்கிறாள்.பாரதியின் பேச்சின் படி மிருதுளா தன் மாமனார் மாமியாரை கொடுமை செய்கிறாள்,தன் கணவரை விவாகரத்து செய்கிறாள். மிருதுளாவின் உடல் சுருங்கி, தொய்வுற்று அவள் இறப்பதை பாரதி பார்க்க போகும் சமயத்தில் பாரதியின் படுக்கை அறை கதவை அவள் அப்பா திறக்கிறார்.

பாரதியின் ஆழ்மனம் மிருதுளாவின் ஒட்டுமொத்த வீழ்ச்சியை,அவள் சரிந்து போவதை தன் மனப் பரப்பில் அரங்கேற்றி அசைபோட்டு பார்த்து அவளை வென்று விட்டதாய் ஆனந்தம் கொள்கிறது.

மனிதர்கள் எல்லோருமே அப்படித்தான் வெளியில் நம்மால் நிகழ்த்த முடியாத வன்மத்தை,குரூரத்தை,கசப்பை,
காழ்ப்பை இப்படித்தான் நம் ஆழ்மன பரப்பில் நம் எதிரானவர்களுக்கு எதிராக நிகழ்த்தி பார்த்துக் கொள்கிறோம்.

பொருளாதார சிக்கனம் கருதி ஒரே வீட்டில் எல்லோரும் வசித்தால் இன்னொரு வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் வாடகை பணம் வரவாகும் என்பதால் தன் தந்தை இறந்து விட்டால் நன்றாக இருக்கும் என பாரதி தன்
ஆழ்மனதில் அழுவது அதிர்ச்சியாக இருக்கிறது.தந்தை இறந்துவிட்டால் அழுது புரளும் பெண்கள் மத்தியில் தன் தந்தை ஏன் இறக்க மாட்டேன் என்கிறார் என அழும் இந்த பாரதி கதாபத்திரம் புதுமையானது.

எல்லா மனித மனங்களும் கசப்புகளால் ஊற்றி நிரப்பப்பட்டதே.அதுவும் பெண்கள் கசப்பின் உருவங்கள்.மனம் சமநிலை உடையும் போதெல்லாம் நாம் ஒருவரை வெறுக்கிறோம் அல்லது அவர்களை பற்றி புறம் பேசுகிறோம் அல்லது அவர்களை நோக்கி வசவுகளை வீசுகிறோம்.

அப்படித்தான் தன்னைத் தாண்டி வளரும் மிருதுளாவை தாங்கிக் கொள்ள முடியாத பாரதி அவளை வேசி என்கிறாள்.மிருதுளாவின் முக மிளிர்வை பார்க்கும் பாரதி மிருதுளா தன் கணவனுடன் கூடி இயங்கும் முன் தின இரவை நினைத்து வயிற்றில் நெருப்பு அள்ளி போட்டது போல் எரிகிறாள்.

வியர்வையின் நசநசப்பில் அலுவலகம் விட்டு வீடு வரும் பாரதி ஒரு வித இறுக்கத்தில் தன் உள்ளாடை தொடை பகுதியை அறுப்பதை கழற்றி வீசிவிட்டு குளித்து முடித்து நைட்டியோடு தன் கணவனுக்காக முன்புணர்வு மயக்கத்துடன் காத்திருக்கும் போது அவள் அடி வயிறு வலிக்க கழிவறையில் சென்று உட்காரும் போது அவள் குறியிலிருந்து குருதி வழிந்து கழிவறையை கருஞ்சிவப்பாக மாறுவதாகவும்,பின் மீண்டும் குளித்து விட்டு நைட்டியோடு பாரதி அமர்வதாக சுரேஷ் கதையை முடிக்கிறார்.
இந்த வாழ்வும்,மனித மனங்களும் கசப்புகளால் ஊற்றி நிரப்பப்பட்டதே அன்றி வேறென்ன?/// வேலு மலையன்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்