///"பெண்களின் அக மன பாவனைகளின் அகங்கார நீட்சியும்,அதன் வீழ்ச்சியும்///"சொட்டுகள்" சிறுகதை///
சுரேஷ் பிரதீப் சமகால எழுத்தாளர்களில் இலக்கிய உலகில் "ஒளிர்நிழல்" மூலம் ஒரு புது வித ஒளியை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் தன்னை நோக்கி குவித்து வருகிறார்.இந்த பதிவு அவரின் "சொட்டுகள்" சிறுகதையைப் பற்றியது.கணவன் இல்லாத
தன் சுய வாழ்வு தோல்வியின் வலி,நிராசை,ஆற்றாமை குமைச்சலை சுமந்து வாழும் ஒரு சராசரி தாயின் ஆளுமையை வீழ்த்திவிட்டு சுதந்திரமாக வாழ நினைக்கும் மகளின் வாழ்வு கணச்சொட்டுகள் கனவாக கலைவதே "சொட்டுகள்" சிறுகதை.கதை நாயகி நீண்ட நேரம் குளிப்பதற்கு "அப்படி எந்த தடிப் பயல நினைச்சிட்டு குளிக்கிற" என தாய் கேட்பது மகள்கள் கற்பனையிலும் கெட்டு விடக்கூடாது,அவளின் குறித்தூய்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரு தாயினுடைய பயத்தின் நீட்சியாக தெரிகிறது. ஆனால் தாயின் ஆளுகையை விட்டு வெளியேறுவதை ஒரு வித வெற்றியாக கொண்டாடுகிறது மகளின் மனம்.உலகின் ஒட்டுமொத்த தாய்களும் அக்கறை என்ற ஆக்கிரமிப்பை மகள்கள் மீது திணிப்பதை உலகின் ஒட்டு மொத்த மகள்களும் வெறுக்கிறார்கள் என்பது பொது உண்மை.இச்சமூக அமைப்பில் பெண் குடும்ப சுய கெளரவங்களின் குறியீடாகவும்,அவள் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வதை தங்கள் தோல்வியாகவும் கருதுகிறார்கள் பெற்றவர்கள்.கதை நாயகி தன் கணவன் விக்னேஷ் தன்னால் வெல்லப்பட்டவன் என நினைத்துக் கொள்கிறாள்.உண்மையில் உலகின் எல்லா ஆண்களும் பெண்களால் வெல்லப்பட்டவர்களே.தன் கணவன் விக்னேஷ் பெண் சுகம் கொள்வதில் முன்  அனுபவம் கொண்டவன் என அறிந்து அவனின் குறித்தூய்மை மீதும்,அவன் மீதும் நம்பிக்கையிழந்து கோபத்தில் குமைகிறாள்."ஒரு ஆணை எல்லாப் பக்கங்களிலும் சூழ்வது பெண்ணுக்கு மிகச்சிறிய செயல் என்பதை காதலிக்கும் போது ஆண்கள் அறிவதே இல்லை" இது விக்னேஷ்க்கும் பொருந்தும் என நினைத்து கொள்கிறாள்.தன் மகள் ரேகா பிறந்ததும்  குழந்தை மீதும் வெறுப்பு கொள்கிறாள், 25 வயதிற்குள்ளாகவே தன்னை தாயாக்கி தன் சரீரத்தின் சதை அழகை உடைத்து தளர்ச்சியாக்கி அவளை ஆண்கள் உலகத்திலிருந்து வெளியேற்றி விட்டதாய் மனம் குமைகிறாள்.தன் மகள் ரேகா தன்னை விட்டு தனி உலகில் வாழ நினைப்பதை தோல்வியாக கருதுகிறாள் ரேகாவின் தாய்."நான் என்னை பணயம் வைத்து அடைந்த இடத்திற்கு எந்த இழப்பும் இல்லாமல் வந்து சேர்ந்திருப்பவள் ரேகா" என அவள் தாய் கதை நாயகி எண்ணிக்கொள்கிறாள்.கதை நாயகி தன் தாயிடமிருந்து விலகி சென்று வாழ்வதை எப்படி சுதந்திரம்,வெற்றி என எண்ணி களிப்படைந்தாளோ அதையே தான் தன் மகள் ரேகாவும் தன்னை வெற்றி கொண்டு களிப்படைகிறாள் என்பதை உணர்கிறாள். தான் தன் தாயிடமும்,தன் மகளிடமும்,தன் கணவனிடமும் தோற்று விட்டதின் வலி தன் மனத்திரையில் சொட்டுகளாய் விழுவதில் தன் வீழ்ச்சி தொடர்ச்சியானது என்பதை அவள் கண்களில் அவளின் தாயின் கண்கள் வந்து உணர்த்துவதாய் "சொட்டுகள்" கதை முடிவடைகிறது.///
வேலு மலையன்

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்