குரவை -சிவகுமார் முத்தய்யா தமிழில் மரமார்ந்த நாட்டுப்புற கலைகள் குறித்தும் அதை வாழ்வாதாரக் கலையாக ஒழுகும் மனிதர்களின் பின்னணி குறித்தும் எழுதப்பட்ட மிகச் சிறந்த படைப்பாக குரவை நாவலை பார்க்கிறேன். கால மாற்றத்தின் சடுதியில் நலிந்து போன கலை குறித்தும் அதை நம்பி வாழ்ந்த மனிதர்கள் குறித்தும் எந்த வித கருணைக் கோரலும் இன்றி எதார்த்தமாய் அந்த மனிதர்களின் வாழ்வை நேர்மையாக பதிவு செய்துள்ளது இந்த நாவல். இதில் வரும் பெண் பாத்திரங்கள் வாழ்க்கையின் மீது எந்த புகாரும் இன்றி தனக்கு வாய்த்த வாழ்க்கையை அல்லது திணிக்கப்பட்ட வாழ்க்கையை அவர்கள் போக்கில் ஏற்று வாழ்கிறார்கள். காவியத் தன்மையுள்ள பெண் பாத்திர சிருஷ்டிப்புகள். நாவலில் வரும் பெண்கள் இரவு முழுக்க உடல் வலிக்க ஆடுவதால் குடிக்கிறார்கள் தனக்கு பிடித்தவர்களோடு படுக்கிறார்கள். விஜயா,நித்யா,பேபி, வசந்தா,சித்ரா, செவத்தக் கன்னி, நீலவேணி என அவ்வளவு அடர்த்தியான கதைகள் கொண்ட பெண் பாத்திரங்கள். தவில் வித்வானாக வரும் கலியமூர்த்திக்கும் வசந்தாவுக்கும் இருக்கும் உறவு முறையற்ற உறவு என்றாலும் அதில் ஒரு ஆழமான அன்பும் உயிர்த் தன்மையையும் இருக்...